Saturday, February 25, 2006

சத்தியம்...



சத்தியம் பேசும் நாவில்
'சரஸ்வதி' வீற்றிருப்பாள்.
சத்தியம் வாழும் வீட்டில்
'லட்சுமி' நிலைத்திருப்பாள்.
சத்தியம் சேர்ந்த நெஞ்சில்
'சக்தி' கொலுவிருப்பாள்.
சத்தியம் செறிந்த நெஞ்சில்
சுய நலம் கரைந்து போகும்.
புத்தனின் செழித்த ஞானம்
சத்தியம் பிழிந்து ஊட்டும்.....

- - -

சாதி மதம் கதைப்பதில்லை.
துவேஷங்கள் விதைப்பதில்லை.
தேதி பார்த்து முடிப்பதில்லை.
தேவைகளால் முடிவதிலை.
சூதுகளால் கவிழ்வதில்லை.
சூழல்களால் அமிழ்வதில்லை.
காதினிலே வம்பு சொல்லும்
காற்றுத் தேடி அலைவதில்லை.
பொது நலனை மறப்பதில்லை.
பொன் குணங்கள் துறப்பதில்லை.

- - -

சத்தியத்தில் வேலி இல்லை.
சத்தியத்தில் போலி இல்லை.
சத்தியத்தில் 'பற்று' இல்லை.
சலனங்களின் புற்று இல்லை.
வித்துவச் செருக்கு இல்லை.
வீண் மமதை நெருப்பு இல்லை.
சத்தியம் அலைகள் போல
அடிக்கடி கலைவதில்லை.
சத்தியம்...சாசுவதம்!
சத்தியம் அன்பின் தவம்!

- - -

சத்தியம் அலைவதில்லை.
சத்தியம் குழைவதில்லை.
சத்தியம் மலைப்பதில்லை.
சத்தியம் மருள்வதில்லை.
இகழ்ச்சியால் குனிவதில்லை.
புகழ்ச்சியால் குளிர்வதில்லை.
சத்தியம் இளைப்பதில்லை.
பாபங்கள் உழைப்பதில்லை.
சத்தியம் களைப்பதில்லை.
தன்மானம் களைவதில்லை.

- - -

எத்தனை தடை வரினும்
சத்தியம் சரிவதில்லை.
சத்தியம் செய்யும் பணிகள்....
சத்தியம் மிளிரும் கலைகள்...
சத்தியம் ஒளிரும் பேனா....
சரித்திரம் புகழ வாழும்!
நித்திய இன்பம் கூட்டும்
நிகரிலா மனிதத் தொண்டை
சத்தியம் கரங்கள் குவித்தே
வணங்கும்..வாழ்த்தும்..போற்றும்!

- - -

சத்தியம் இயல்பில் தென்றல்!
சீண்டினால்...'மோனப் புயல்'
சத்தியம் கேட்பதில்லை.
சத்தியம் கொடுப்பதற்கே!
சத்தியம் அழுவதில்லை.
சத்தியம் புன்னகையே!
சத்தியம் விழுவதில்லை.
சத்தியம் எழுவதற்கே!
சத்தியம் சோர்வதில்லை.
சத்தியம் 'சோதி மரம்' !

- யாழ் சுதாகர்

0 comments: