Saturday, February 25, 2006

மௌனம்...




மௌனம் என்பது.....
கோழைத்தனத்தின் போர்வை அல்ல.
தெளிந்த மனதின் பார்வை அது.

மௌனம்.....
உணர்ச்சிகளின் சரிவு அல்ல.
உள்ளிருக்கும் மனதின் கோபுர நிமிர்வு.

மௌனமே மனோபலம்....மயக்க நிவாரணி.
தியானபீடம்!

நதியும் அதுவே...அக்னியும் அதுவே!

மௌன நதியில்...கோபம் அணையும்.
மௌன நெருப்பில் பகைகள் நீறாகும்.

மௌனம் சபிக்காது!
சபித்தால்...சந்ததி தாங்காது!

கேடயமும் அதுவே...ஆயுதமும் அதுவே!

கேள்வியும் அதுவே...பதிலும் அதுவே!

கடவுளோடு கதைக்க வேண்டுமா?
'மௌனப் பாலம்' கட்டு.
உன்னுடன் நீயே
முதன் முறையாகப் பேசும் அதிசயம்!
பின்...'நீயே கடவுள்' என்றுணர்வாய்.

மௌனம்....
காதலைக் காவியம் ஆக்கும்.
தாய்மையில் கோயில் கட்டும்.

பாசத்தால் பந்தல் போடும்.
பக்தியில் பரவசம் குடிக்கும்.

மனம்...ஒரு அழகான புல்லாங்குழல்!
ஆனால் அதைக் கையிலெடுத்து
புருஷோத்தம வித்துவத்துடன்
தேவ ராகம் மீட்ட்.....
'மௌனம்' வர வேண்டும்!

கிளை விட்டுக் கிளை தாவாத 'மலை' மனம்
மௌனத்தின் வரம்!

அமைதிப் பூங்காக்கள் அனைத்துக்கும்
மௌனமே உரம்!
அதனால்தான் ஆன்மீகத்தின் அனைத்துப் பிரிவுகளும்
மௌனத்தை சிபாரிசு செய்கின்றன.

மௌனம்....
தன்னம்பிக்கையின் குரு.
தன்னடக்கத்தின் தாய்.

நுண்ணறிவின் தந்தை.
நூலகம்.

மௌனம் என்பது....
சுமைகளில் இருந்து தப்பிக்க முயலும்
சுயநலம் அல்ல!

சுமைகளைக் கூட இலவம் பஞ்சாக மாற்றித் தரும்
மந்திர ஓசை!
சகிப்புத் தன்மையின்
சங்கீத பாஷை!

அப்பப்பா [தாத்தா]
ஒரு சின்ன விதையைத்தான் விதைத்தார்.
அதற்குள்ளிருந்து இத்தனை பெரிய மாமரமா?!

மௌனத்தை விதை!
இன்னும்....
அகலமாகவே ஆச்சரியப்படுவாய்!

- யாழ் சுதாகர்

LINK

RADIO PROGRAMMES OF YAZH SUDHAKAR

E MAIL -
yazhsudhakar@gmail.com

PHONE - 9840419112

1 comments:

said...

Nice to know Yarl sudhakar is in blogger world.I enjoy all your poems and songs in FM. I like your compering style also.